புதுடில்லி : தொலைபேசிகளில் வேண்டாத தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு கணிசமான அபராதம் விதிக்கும் நடைமுறையை மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) இன்று முதல் செயல்படுத்துகிறது.
தொலைபேசிகளில், குறிப்பாக மொபைல் போன்களில் தினமும் தேவையற்ற அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. வங்கியில் கடன் வேண்டுமா? உங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா? உங்களுக்கு பல லட்சம் ரூபாயில் பரிசு காத்திருக்கிறது என்பது போன்ற பல்வேறு விதமான விளம்பரங்கள், தொலைபேசி வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்கின்றன. ஒருமுறை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, இதுபோன்ற அழைப்பு வந்ததால் கடுப்பானார். இந்த பிரச்னைக்கு முடிவுகட்டும்படி, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரை அவர் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தேவையில்லாத அழைப்புகளை விரும்பாதவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் எதாவது ஒரு முறையில் இது போன்ற அழைப்புகளும், குருந்தகவல்களும் (எஸ்.எம்.எஸ்.,) வந்து கொண்டு தான் இருக்கின்றன.
"அழைக்காதீர்' பட்டியலில் தங்கள் தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பிறகும், டெலிமார்க்கெட்டிங் சேவை நிறுவனங்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், என கூறப்பட்டது. இதை டெலிமார்க்கெட் நிறுவனங்களோ, தொலைபேசி சேவை நிறுவனங்களோ கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே, அபராத தொகையை கணிசமாக உயர்த்த "டிராய்' முடிவு செய்துள்ளது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங் கள் "700' என்ற இலக்கத்தில் துவங்கும் தொலைபேசி எண்ணில் தங்கள் விளம்பரத்தை அனுப்ப வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, என்றால் சேவையை தொடரலாம். அவர்கள் இதை தொல்லை தரும் அழைப்பாகக் கருதி புகார் செய்தால், சம்பந்தப்பட்ட டெலிமார்க்கெட் நிறுவனத்துக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தேவையற்ற அழைப்பை அனுப்பினால் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது அழைப்புக்கு 80 ஆயிரமும், நான்காவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரமும், ஐந்தாவது அழைப்புக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், ஆறாவது அழைப்புக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெலிமார்க்கெட் நிறுவனங்கள் தொலைபேசி சேவை நிறுவனத்திடம் கணிசமான உத்தரவாத தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
வாடிக்கையாளரின் எதிர்ப்பை மீறி விரும்பத்தகாத அழைப்புகளை அனுப்பும் தொலைபேசி நிறுவனத்துக்கு முதல்முறை ஒரு லட்ச ரூபாயும், நான்காவது முறை இந்த தவறை செய்யும் போது 10 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் "டிராய்' முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையை இன்று முதல் டிராய் அமல்படுத்துகிறது. மொபைல் போன் நிறுவனங்களின் தேவையில்லாத அழைப்புக்காக வாடிக்கையாளர் சேவையை அணுகினால் "ஆங்கில பதிலுக்கு இந்த எண்ணை அழுத்துங்கள்; மாநில மொழி பதிலுக்கு இந்த எண்ணை அழுத்துங்கள்; அதன் பிறகு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்' என காத்திருக்க வைப்பது வாடிக்கை. அப்போது அதற்காகும் கட்டணம் நுகர்வோர் தலையில் விழும். இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருவது என்றாலும், இதற்கான நடைமுறைகளும் "டிராய்' மூலம் தெளிவாக்கப்பட்டால் தான் "பெஸ்கி கால்' என்றழைக்கப்படும் அர்த்தமற்ற அழைப்புகள் தொந்தரவு நிஜமாகவே தீரும். டிராயின் தற்போதைய நடவடிக்கைகள் இதற்கு தீர்வு ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment