Popular Posts

Jan 7, 2011

வடமில்லா வலையமைப்பு (Wi-Fi) ஒரு பார்வை : பாகம் 2

ஆரம்பத்தில் 2 Mbps வேகத்தில் தவழ ஆரம்பித்த வடமில்லா வலையமைப்பு இன்று 54 Mbps வேகத்தில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. வேகத்திற்குத் தகுந்த மாற்றங்களை தொடர்பு வழிமுறையான 802.11 பிரதிபலிக்கத் தவறவில்லை. ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னும் 802.11a,802.11b,802.11g மற்றும் 802.11n வழிமுறைகளின் பெயர்களும் மாற்றம் பெற்றன. ஒவ்வொரு வழிமுறையின் செயல்விவரங்கள் கீழே.

802.11a - 5GHz அலைவரிசை - 54Mbps வேகம்
802.11b - 2.4GHz அலைவரிசை - 11 Mbps வேகம்
802.11g - 2.4GHz அலைவரிசை - 54Mbps வேகம்
802.11n(draft) - 2.4GHz அலைவரிசை - 100 Mbps வேகம்

வேகத்திற்கேற்ப விலை. இவற்றுள் 802.11a 5GHzல் செயல்படும் திறன் கொண்டதால் விலை அதிகம் மற்றும் பயணிக்கும் தூரம் குறைவு. 2.4GHzல் செயல்படும் இதரவகைகள் அதே அலைக்கற்றையை பயன்படுத்தும் microwave oven, chordless telephone மற்றும் bluetooth உபகரணங்களால் தொல்லையைக் கொடுத்தாலும் அவற்றின் வேகத்திற்கு அடக்கமான விலையில் கிடைக்கும். 802.11b மற்றும் 802.11g பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். 802.11n சந்தைக்குப் புதிது, இன்னும் அனைத்து இடங்களுக்கும் சென்றடையவில்லை.
மேற்சொன்ன விவரங்களை மனப்பாடம் செய்து கொண்டு , அடுத்த முறை கடைக்குச் சென்று வடமில்லா வலையமைப்பு உபகரணங்கள் வாங்கும் போது அவற்றின் வழிமுறை வகைகளைப் (802.11a,b,g,n) பற்றிய கேள்விகளைஅள்ளி விட்டு கடைக்காரரை அரள விடப்போகும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள் :). அவ்வாறு கேள்விகள் கேட்கும் போது சுற்றியிருக்கும் அனைவரும் உங்களைப் பார்க்கும் பார்வையின் போதையே தனி, அனுபவித்துப் பார்க்கவும் :D.

அடுத்து என்னென்ன உபகரணங்கள் சந்தையில் கிடைக்கின்றன, அவற்றின் பயன் ஆகியவை குறித்து. இப்பொழுது வெளிவரும் அனேக செல்பேசிகள்/மடிக்கணினிகளில் வடமில்லா வலையமைப்பு வசதியோடே வருகின்றன. எனவே அவற்றைப் பயன்படுத்தும் எண்ணமிருந்தால் வாங்கும் போது இத்தொழில்நுட்பம் குறித்தான விவரங்களைப் பார்த்து வாங்குதல் சிறப்பு. தனி உபகரணங்கள் விவரங்கள் கீழே.
மேலே உள்ளவை வடமில்லா வலையமைப்புப் பொருத்திகள் (wireless adaptors). தடமில்லா வலையமைப்பு வசதியில்லாத மடிக்கணினியோ அல்லது மேசைக் கணினியோ வைத்திருப்பவர்கள் இவற்றை பொருத்தினால் அவ்வசதியைப் பெறலாம். அவற்றின் தோற்றமும், பொருத்தும் வழிமுறையும் பீதியளிப்பதாகக் கருதுபவர்களுக்கு USB பொருத்திகளும் கிடைக்கின்றன.

 ADSL routers மற்றும் wireless routers இவையிரண்டும் வலையமைப்புக் கருவிகள். உங்கள் இணைய இணைப்பு மற்றும் வலையமைப்பு இரண்டையும் சமாளிக்க வல்ல ADSL routers மற்றும் வலையமைப்பு வசதிக்கான wireless routers ஆகியவையும் இரண்டும் கண்னெனத்தகும்.
  வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளி (wireless access point) என்பது வலையமைப்பு தடத்தினை (802.3), வடமில்லாதவையாக மாற்ற வல்லது (converts 802.3 to 802.11). உங்கள் கணினிக்கு வரும் வலையமைப்பு வடத்தினை இதில் பொருத்தினால் அந்த இடத்திலிருந்து வடமில்லா வலையமைப்புக்கான அலைகளைப் பரப்பும்.
 வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளி என்பது access point/router எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவை செயல்படும் வழிமுறையும், உங்கள் கணினியில் இருக்கும் பொருத்தியின் (wireless adaptor) செயல்பாட்டு வழிமுறையும் ஒத்ததாக இருந்தால் அதிகபட்ச வலைத்தொடர்பு வேகத்தினைப் பெற்று மகிழலாம். உதாரணத்திற்கு 802.11g வழியில் செயல்படும் தொடர்புப் புள்ளியில், 802.11b வழியில் செயலபடும் பொருத்தியைக் கொண்ட கணினியினை இணைத்தால் 802.11bக்கு உரிய வேகத்தினையே அனுபவிக்கலாம். உபகரணங்கள் வாங்கும் போது இதனையும் கருத்தில் கொள்ளவும்.
 
 இன்று அனேக அகலப்பட்டை இணைய இணைப்புகள் ADSL routers மூலமாக வழங்கப்படுகின்றன. உங்கள் வீட்டில் இருந்தால், எழுந்து சென்று பார்த்து விட்டு, பிறகு தொடர்ந்து படிக்கவும். பெரும்பாலான பயனாளர்கள் இவ்வசதி குறித்து போதிய விழிப்புணர்வின்றியே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இணைய இணைப்பு வழங்குநர்களும் இது குறித்த விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு முறையாகத் தெரிவிப்பதாகத் தோன்றவில்லை. வாடிக்கையாளர்களுக்குப் பாடம் நடத்துவது அவர்கள் வேலையில்லையென்றாலும், பயனாளர் என்ற முறையில் அறிந்து கொள்வது நம் கடமை. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு. பாதுகாப்பற்ற வடமில்லா வலையமைப்பின் மூலம் வரும் ஆபத்துகள் பலவிதம். முக்கியத் தீவிரவாதி என்றோ, இவர் தான் வெடிகுண்டு முருகேசன் என்றோ, ஒரு நாள் அதிகாலை, சுபவேளை மாமாக்கள் ஓலையோடு வரக்கூட வாய்ப்பிருக்கிறது. எப்படி? அதைத் தவிர்க்கும் முறைகள், இத்தொழில்நுட்பத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து அடுத்த பகுதியில்.

நன்றி : சுடுதண்ணி 


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்