Popular Posts

Jan 4, 2011

Window-98 & India 2010

நம்ம கணிணியில உபயோகப்படுத்தற மென்இயக்கி,அதாங்க சாளரம்-98 (விண்டோஸ்-98) இருக்கில்ல, அது உலகம் பூரா எப்படின்னு தெரியல, நம்ம நாட்டுல, முழுக்க முழுக்க திருட்டுப் படைப்பு(pirated version)தான், இல்லையா?

பார்த்தார் நம்ம பில்கேட்ஸ். இதை இப்படியே விட முடியாது,ஆனா திருத்தவும் முடியாது. எத்த்னை பேரு கிட்ட போயி ,'தயவு செய்து எங்க மென்பொருளை காசு கொடுத்து வாங்குங்க'-ன்னு கெஞ்ச முடியும்? நாம டி.வி.டி வாங்கி புதுப் ப்டம் பார்க்கறதை நிறுத்திட்டமா என்ன?(டி.வி.டி வாங்கி புதுப் ப்டம் பார்க்கறதை ஏன் நிறுத்தனும்? நமக்குப் புடிச்சிருக்கு, செய்யறோம்!)

அதனால,பெருந்தன்மையா ஒரு வேலை பண்ணார். சாளரம்-98ஐ அந்தந்த நாடுகளுக்கே தானமாக் கொடுத்திட்டார்.
அதாவது நம்ம பாணியில, "windows-98 நாட்டுடைமை ஆக்கப்பட்டது"
இதான் விஷ்யம்.

"அஞ்சாறு OS வச்சிருக்கறவன் எல்லாம் சந்தோஷமா கணிணிய இயக்கறான்; ஆனா ஒரு OS வச்சிகிட்டு நான் படற பாடு இருக்கே"-ன்ற கட்சியா நீங்க? பொறுங்க, அதை அப்புறம் பார்க்கலாம். (வேற என்ன ரீ-இன்ஸ்டால்தான்), இப்ப இதப் படிங்க…….!

*******************************************************
குடியரசுத்தலைவர் அவசர அறிவிப்பு : விண்டோஸ்-98ஐ வரும் ஜனவரி-26 ஆம் நாள் குடியரசு தினத்தன்று நாட்டுடைமை ஆக்குவதாக தேசத்தின் குடியரசுத்தலைவர் பிரதீப பாட்டீல் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விண்டோஸ்-98 மென்பொருள் எப்படி அரசுக்கு கிடைத்தது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாக்.தீவிரவாதி கசாப்பின் கோப்புகள் பார்க்க வேண்டி இருப்பதால், குடியரசுதின உரையில் மேல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என முடித்துக் கொண்டார்.

மேலும் தகவல்கள் அரசு தரப்பில் இருந்து வரும் என எதிர்பார்க்கப் படுவதாகத் தெரிகிறது.

பிரதமர் பேட்டி : சீனாவின் லிங்-சுங் மாவட்டத்தில் அவசர பிரயாணம் சென்றுள்ள பாரதப் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அங்கேயே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இது காங்கிரஸ் அல்லாத ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒன்று என்வும், இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளினால் க(ல)வரப்பட்டே திரு.பில்கேட்ஸ் நமக்கு இப்படி ஒரு சௌகரியம் அளித்துள்ளார் எனவும் கூறினார். வரும் 2011 ஜனவரியில் நாட்டுடைமை ஆக்கப்படும் விண்டோஸ்-98, கிட்கி-98 எனும் புதிய பெயரில் 'ராஜிவ்காந்தி உத்யோக் நிகாம்' கீழ் வரும் என்றும், இதை எளிதில் தரவிரக்கம் செய்யும்விதமாக, அரசு வெப்-சைட்டில் லிங்க் தரப்படும், அதை பி.எஸ்.என்.எல். கட்டுப்பாட்டில் விடுவதற்காக துறை அமைச்சர் ராஜாவிடம் பேச தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். (அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யாரும் கேட்கவில்லை எனத் தெரிகிறது)


எம்.பி. கோட்டாவில் விண்டோஸ்-98 பெறுவது கட்டுப்படுத்தப்படுமா என்ற ஒரு 'பக்கா'வான கேள்விக்கு, (சிபாரிசு கடிதத்துக்கு எம்.பிக்கள் தற்போது ரூ.எட்டாயிரம் வாங்குகிறார்கள்) பிரதமர் சற்று கடுப்புடன், கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து சிரித்துக்கொண்டே 'பார்டன்' என பதிலளிக்க மறுத்துவிட்டார்.

எதிர்கட்சியினர் ஆவேசம் : விண்டோஸ்-98 ஐ உள்நாட்டிற்குள் கொண்டுவருவது(எங்கையா இருக்கீங்க?) இந்தியாவின் இறையாண்மையை சேதப் படுத்தும் என பா.ஜ. மூத்த தலைவர்களில் (ஒரே)ஒருவரான அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

நிதின் கட்காரியும் வேறு வழி இல்லாததால் இதே கருத்தை தான் வழிமொழிவதாகத் தெரிவித்துள்ளார்.
தன் பேரன் அரசியலில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ளமாட்டாமல்தான் மத்தியஅரசு இம்மாதியான பொய்பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக பால் தாக்கரே தெரிவித்துள்ளார். இதற்கு மஹாராஷ்ட்ராவில் தங்கியுள்ள மற்ற மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி பதில் தெரிவிக்க முடியும் என்வும், ஆனால் தமது இயக்கத்தினர் அம்மாதிரியான செயல்களில் ஈடுபடாமல் தன்னால் தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். ஆனால் எக்காரணம் கொண்டும் விண்டோஸ்-98 இந்தியாவிற்குள் வருவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

கர்னாடகா மாநில குமாரசாமி,எடியூரப்பா பிரச்னைக்கும் விண்டோஸ்-98 வருகைக்கும் நிச்சயம் எதோ தொடர்பு இருப்பதாகவும், தனக்கு அது தொடர்பான ஆவணங்கள் விரைவில் வரும், வந்ததும் 2011 தமிழக தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று (சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எப்பொழுதும்போல்) சுப்பிரமணிய சுவாமி அமெரிக்காவின் சான்-பிரான்ஸிசில் இருந்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் கதாநாயகன் சுரேஷ்கல்மாடியை மறந்துவிட்டு, விண்டோஸ்-98 CDஐ கையில் எடுத்துக்கொண்டு பாராளுமன்ற மைய மண்டபத்தில் கூக்குரல் எழுப்பி ரகளையில் ஈடுபட்ட எம்.பி.க்களிடம் சபாநாயகர் சோம்னாத்சட்டர்ஜி , விண்டோஸ்-98 வருகையினால் எம்.பி.க்களின் தொகுதி நிதி பாதிக்கப்படாது, பயணப்படி குறைக்கப்படாது என உறுதியளித்தார். நீங்கள் இப்படி நடந்து கொள்வது என் கடைசிக் காலத்தில்கூட எனக்கு வேதனையை தருகிறது எனக் கூறிவிட்டு வெளியேறினார். பிறகு எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டுக் குழுவிடம் மேல்முறையீடு செய்துவிட்டு போண்டா சாப்பிட கேண்டீன் சென்றனர்.

இதெல்லாம் அங்கே, மத்தியில்………இங்கே, மாநில நிலவரம் என்னன்னு பாக்கலாமா?

வரும் தேர்தலுக்கு முன்பாகவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வண்ணத்தொலைக்காட்சியோடு, விண்டோஸ்-98-ம், வழங்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் விதமாக 'அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாநாடு' வரும் நவம்பர் இறுதியில் நடக்கும் என துணைமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கும் பணி அதுவரை நிறுத்திவைக்கப்படும் எனவும், சத்துணவு பணியாளர்கள் குடும்பத்துக்கு தலா ஒரு ஓ.எஸ். வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் வழங்கப்பட்டாலும், இது அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ்தான் வரும் என்வும் தெரிவித்தார்.

டாஸ்மாக் பணியாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு பக்கத்து வீடுகளுக்கும் ஓ.எஸ் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்த் தெரிகிறது.

அந்தந்த ஏரியா கவுன்சிலர்களின் சிபாரிசுக் கடிதத்துடன், கிராம நிர்வாக அலுவலர் ஒப்புகையுடன், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், சத்துணவு ஆயா மூலம் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, மலிவு விலையில் அரசு கம்ப்யூட்டரும், தேவைப்பட்டால் விண்டோஸ்-98-ம் அடுத்து வரும் அரசு விழாவில் வழங்கப்படும்.

"மதுரையில் தமிழகமே கிடுகிடுக்க நடந்த அ.தி.மு.க.வின் கண்டனப் பொதுக்கூட்டம், எங்கே கின்னஸ் பதிவாகி விடுமோ எனப் பயந்தே கருணாநிதி இப்படி ஒரு புதிய- தமிழகத்துக்கு தேவையே இல்லாத திட்டத்தை அறிவித்திருக்கிறார்" என்று செல்வி.ஜெ.ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் அ.தி.மு.க.வில் கூட்டணி முடிவாகிவிட்ட படியால்தான் காங்கிரஸ் தைரியமாக விண்டோஸ்-98 ஐ களமிறக்கியுள்ளது எனவும்,கடந்த பாராளுமன்றக் கூட்டத் தொடரில் அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டமே விண்டோஸ்-98 மக்களுக்குக் கிடைத்திடக் காரணம், இல்லையேல் இது ஒரு தனிப்பட்ட குடும்பச் சொத்தாக மாறியிருக்கும் என்றார். ஆனாலும் அடுத்துவரும் அ.தி.மு.க ஆட்சியில் விண்டோஸ்-98ஐ அரசு அலுவலர்கள் தவிர அனைவருக்கும் இலவசமாகத் தர உடனடி நடவடிக்கை உண்டு என்றார்.

ஏதென்ஸ் நகரம்….என ஆரம்பித்த வை.கோ. தலையை சிலுப்பிக்கொண்டு 'சரி, அது வேண்டாம்' என தனக்குள் சொல்லிக் கொண்டு,பின் ஏதோ நினைத்தவராக "இலங்கையில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுவிட்ட வேளையில், ஏதும் அசைந்து கொடுக்காத அமெரிக்க ஏகாதிபத்திய விண்டோஸ்-98 நமக்கெதற்கு? இதற்கெல்லாம் கலைஞர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒரு குடும்ப உபயோகத்திற்காக ஒரு விண்டோஸா? திருவாசகம் பற்றி உரையாற்ற அவசரமாக போய்க் கொண்டு இருப்பதால் மீண்டும் இது போல் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன்" என்றார்.

"இலவசங்கள் மூலம் இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தைக் கெடுத்து குட்டிச்சுவராக்கியுள்ளன", என விருதாச்சலம் பொதுக்கூட்டத்தில்(மட்டும்) பேசிய விஜயகாந்த் "தே.மு.தி.க (ஒருவேளை) ஆட்சிக்கு வந்தால், அல்லது 'விருதகிரி' தியேட்டருக்கு வந்தால் விண்டோஸுடன் எம்.எஸ்.ஆபிஸ்-2007-ம் இலவசமாக வழங்கப்படும், அதுவும் பொது மக்களின் இல்லத்துக்கே வந்து இன்ஸ்டால் செய்து, ஸ்டார்ட்  ஆல் ப்ரொக்ராம்ஸ்  கேம்ஸ்  சாலிடர் கேம்ஸ், போவது வரை அருகில் இருந்தே சொல்லித்தர 24 மாவட்டங்களில் 7 தினப் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து,5000 பட்டதாரிகளை இண்டர்வியூ செய்து, 3000 பட்டதாரிகளை தேர்ந்தெடுக்கும் பணியும் தொடங்கிவிட்டதாக……."( உஷ்….கண்ணைக் கட்டுது)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்