Popular Posts

Jan 7, 2011

 வடமில்லா வலையமைப்பு (Wi-Fi) - ஒரு பார்வை : பாகம் 3

 தமிழக மீனவர்கள் கடைசியாக எப்பொழுது சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டார்கள் என்பதே நினைவில் இல்லாத போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து பலர் பலியானது நிச்சயம் மறந்திருக்கும். அச்சம்பவத்தின் சிறப்பு என்னெவென்றால் குண்டுவெடிப்பு நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இந்த மாதிரி, இந்த இடத்தில், இப்படி வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்று காவல்துறைக்கு தீவிரவாதிகளால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதை மேலதிகாரிகள் பார்வைக்குக் கொண்டு செல்லும் முன்பே தொலைக்காட்சிகள் விளம்பரக் கொண்டாட்டங்களோடு அகமதாபாத்திலிருந்து நேரடி வர்ணனைகளைத் தொடங்கி விட்டிருந்தன.
 கென்னத்
குண்டுவெடிப்பு விசாரணைக்கு அந்த மின்னஞ்சல் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குண்டுதுளைக்காத சட்டைக்குப் பலியான ஹேமந்த் கர்க்கரே தலைமையில் மின்னஞ்சலின் பூர்வீகம் தேடத்துவங்கப்பட்டது. 
தேடலின் பாதை முடிந்த இடம் மும்பையில் தங்கியிருந்த கென்னத் என்றொரு அமெரிக்கரின் வீடு. மின்னஞ்சலில் தொடக்கப்புள்ளியான இணைய இணைப்பு முகவர் எண்ணிற்குரியவர் அவர். பல நாட்கள் குடைந்தெடுத்ததில் கென்னத் ADSL router மூலம் வடமில்லா வலையமைப்பில் இணையத்தைப் பாவித்து வந்ததையும், அதைக் காற்றோட்டமாக எந்தப் பாதுகாப்பும் இன்றி திறந்து வைத்திருந்ததையும் தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை என்று தெரியவந்தது. பின் எப்படி? மடிக்கணினியை மடியில் வைத்து, தங்கள் மடியைக் காருக்குள் வைத்து மும்பைத் தெருக்களில் இணைய இணைப்பைத் திறந்து வைத்திருக்கும் அன்பரைத் தேடியலைந்த குற்றவாளிகளுக்குச் சிக்கிய இரை தான் கென்னத். ரோட்டோரமாக சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி மின்னஞ்சல் அனுப்பி மறைந்திருக்கிறார்கள்.  
இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் வடமில்லா வலையமைப்பைப் பாவிப்பவரா, உங்கள் வலையமைப்பு சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் கொக்கி போட்டு ஆப்பு வைக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா?. இல்லையென்றால் உடனே சரிசெய்து விடுவது அவசியம். கென்னத் என்ற நபருக்கு நேர்ந்தது யாருக்கும் வரலாம், கென்னத்தின் பெயர் வேறு மாதிரி இருந்திருப்பின் விசாரணையின் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.

உங்கள் வடமில்லா வலையமைப்பு பரிபூரணமாக பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், வலையமைப்பினை பிற நபர்கள் யாராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல் நலம். அப்படியே தவிர்க்கவியலாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால், வேலை முடிந்த மறுநிமிடம் வலையமைப்பில் இணைவதற்கானக் கடவுச்சொல்லை மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் வடமில்லா வலையமைப்பில் ஒருவர் இணைந்து விட்டால், உங்கள் தொடர்புப்புள்ளியில் நடைபெறும் 'அனைத்து' தகவல் பறிமாற்றங்களையும் (HTTPS பக்கங்களைத் தவிர்த்து) கண்குளிரக் காணலாம். இதற்கென பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் இரைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் கூகுளாடவும். பயிற்சிக்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்துங்கள், பக்கத்து வீட்டு தொடர்புப் புள்ளியை எட்டிப் பார்ப்பது குற்றம் என்பதை நினைவில் கொள்ளவும் :).
வடமில்லா வலையமைப்பின் பாதுகாப்புக்கு என்னென்ன செய்ய வேண்டும்?. முதலில் வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளியினை எப்படி அணுகுவது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்?. தொடர்புப்புள்ளியின் உள்-வலையமைப்பு எண்ணை (LAN-IP address), உலாவியில் உள்ளிட்டால், தொடர்புப் புள்ளியின் மென்பொருள் பக்கங்களைக் காணலாம். ஒரு வேளை உள்-வலையமைப்பு எண் தெரியாவிட்டால் start->run->cmd என்ற இடத்திற்குச் சென்று ipconfig என்று உள்ளிடவும். அதில் default gateway என்று குறிப்பிடப்பட்டிருக்கும் உள்-வலையமைப்பு எண் தான் உங்கள் வடமில்லா வலையமைப்பிற்கானத் தொடர்புப் புள்ளியினுடையது.

இந்த பக்கங்கள் ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கேற்ப மாறுபடும். எனவே தேடிக் கண்டுபிடிக்கவும். சிரமங்கள் இருப்பின் உங்கள் வடமில்லா வலையமைப்பு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் என்ன வகை (manufacturer and model details)ஆகிய விவரங்களுடன் கூகுளிடம் சரணடையவும். பின்வரும் விவரங்களை உங்கள் தொடர்புப்புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் உள்ளிட்டு விட்டால் அதிகபட்ச பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது ;).

password/கடவுச்சொல்:
முதலில் உங்கள் வடமில்லா வலையமைப்பின் தொடர்பு புள்ளியினைத் தொடர்பு கொண்டு வலையமைப்பில் இணைவதற்கானக் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். தயாரிப்பாளர்கள் பயனாளர் பெயராக 'admin/administrator' மற்றும் கடவுச்சொல்லாக 'admin/password' ஆகியவற்றை உள்ளிட்டே விற்பனை செய்வார்கள். அதை மாற்றாமல் அப்படியே பத்திரமாக வைத்திருந்தால் அதிகபட்சம் இரண்டே முயற்சிகளில் உங்கள் வலையமைப்பு புள்ளிக்கு நுழைய முடியும். என்வே கடவுச்சொல்லை கடினமான ஒன்றாக மாற்றுவது சாலச்சிறந்தது. சிறிய எழுத்துக்கள், பெரிய எழுத்துக்கள் மற்றும் எண்கள் (combination of lowercase, uppercase and numbers) இவற்றின் கலவையாக இருத்தல் சிறப்பு.

- பாதுகாப்பு விவரங்கள் தொடரும்....
 
 நன்றி : சுடுதண்ணி

 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்