Popular Posts

Jan 7, 2011

வடமில்லா வலையமைப்பு (WiFi) - ஒரு பார்வை : 4 (முற்றும்)

Wireless Encryption / சங்கேதக் குறியீட்டு முறைகள்:

தொடர்புப்புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் wireless அல்லது WiFi என்ற பகுதிக்குச் சென்றால் வலையமைப்பின் தொடர்பு முறைக்கு என்னென்ன சங்கேதக் குறியீட்டு முறைகளைப் பின்பற்றுவது (encryption methods) போன்ற விவரங்கள் இருக்கும். இம்முறைகளில் WEP (wireless encryption protocol) மற்றும் WPA/WPA2 (WiFi Protected Access) என்று இரண்டு உண்டு. WEP முறைக்கு WEAK encryption protocol என்ற பெயரும் உண்டு. WEP சற்றுப் பழைய கஞ்சி தான் என்றாலும், வலையமைப்பு விஷயங்கள் தெரிந்தவருக்கு WEP முறையை உடைப்பதற்கு 60 நொடிகள் போதும் :D. இன்றைய தேதிக்கு WPA முறையே சிறந்தது. WPA பயன்படுத்துவதற்கு உங்கள் இயங்குதளத்தில் (operating system) அதற்கான கோப்புகள் இருக்க வேண்டும். இல்லாதவர்கள் இங்கே சென்று தறவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதலில் WEP எப்படி செயல்படுகிறது?. பறிமாறிக் கொள்ளும் தகவல்களைச் சங்கேதக் குறியீடுகளாக மாற்றுவதற்கான குறிச்சொல்லை (encryption key) வழங்கிவிட்டால், அதற்கேற்ப தகவல்கள் மாற்றப்பட்டு அனுப்பப்படும். அந்த குறிச்சொல்லை வடமில்லா வலையமைப்பிற்கான தொடர்புப் புள்ளி மற்றும் பயன்படுத்தும் கணினி என இரண்டு பக்கமும் உள்ளிட்டால் மட்டுமே தொடர்பு சாத்தியப்படும் என்பது நினைவில் கொள்ளவும். ஒரு குறிச்சொல்லை வைத்துக் கொண்டு காலம் முழுக்க தகவல் பறிமாறிக்கொள்வது ஆபத்தானது. மொழி தெரியாத ஊரில் என்ன பேசுகிறார்கள் என்பது ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் சில காலம் கழித்து நாம் அந்த மொழியைக் கற்றுக் கொள்வதைப் போல, உங்கள் வலையமைப்பினை தொடர்ந்து நோட்டம் விட்டால் அக்குறிச்சொல்லைக் கண்டுபிடிப்பது எளிது. இதுவே WEP பெரிதும் நம்பப்படாமல் போனதற்கான காரணம்.

WEP/WPA ஆகியவற்றுக்கு உங்கள் கணினியைத் தயார்ப்படுத்துவதற்கு control panel-> network connections -> wireless network -> properties என்ற இடத்திற்குச் சென்று WEP/WPA தேவையானதைத் தேர்வு செய்து குறிச்சொற்களை இடவும் (பார்க்க படம்) . இக்குறிச்சொற்களும், தொடர்புப்புள்ளியின் குறிச்சொற்களும் ஒன்றாக இருப்பது அவசியம்.

அடுத்து WPA/WPA2. இதில் முதன்முதலில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள மட்டுமே நாம் வழங்கும் குறிச்சொல் (pre shared key) பயன்படுத்தப்படும். அதன் பின் குறிப்பிட்டக் கால இடைவெளியில் குறிச்சொல் தானாகவே மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் இத்தொடர்பு முறையை உடைப்பது மிகமிக கடினம். இதனை செயல்படுத்துவதற்கு உங்கள் தொடர்புப் புள்ளியில் இதற்கான மென்பொருள் பக்கத்துக்குச் சென்று WPA என்பதனைத் தேர்வு செய்து, PSK என்ற இடத்தில் குறிச்சொல்லை வழங்கி பின்னர் group key interval/Rekey interval என்ற இடத்தில் எத்தனை நொடிகளுக்கு ஒருமுறை உங்கள் குறிச்சொல் மாற்றப்பட வேண்டும் என்பதனையும் உள்ளிட்டு சேமித்து விட்டால் உங்கள் பாதுகாப்பான வடமில்லா வலையமைப்புத் தயார்.

SSID (Service Set Identifier)/சேவைப்பெயர் :

SSID என்பது உங்கள் தொடர்புப் புள்ளியின் சேவைக்கான பெயர். அந்த பெயரிலே தான் உங்கள் தொடர்பு புள்ளி காற்றிலே பரப்பப்படும். வடமில்லா வலையமைப்பு உபகரணங்களின் சேவைப்பெயர்களாக பெரும்பாலும் தயாரிப்பாளர்களின் பெயரையே சேமித்து வைத்திருப்பார்கள் (ஒரு வெளம்பரம்ம்ம்). அதனை முதல் வேலையாக மாற்றிவிடுவது இனிது. அதனினும் இனிது உங்கள் SSID broadcasting என்ற தேர்வைச் செயலிழக்க செய்து விடுவது. உங்களின் சேவைப்பெயர் உங்களுக்கு மட்டுமே தெரிந்தால் போதுமானது.

MAC address filtering:

MAC (media access control) address என்பது அனைத்து வலையமைப்பு உபகரணங்களிலும் அதனைப் பெற்றெடுத்தத் தயாரிப்பாளர்கள் வைக்கும் பெயர். உங்களின் கணினி, வடமில்லா வலையமைப்பின் தொடர்புப் புள்ளி ஆகிய அனைத்துக்கும் இந்தப் பெயர் இருக்கும். தொடர்புப் புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் Wireless Management/ MAC Filter ஆகியவற்றிற்கானப் பக்கத்துக்குச் சென்று எந்தெந்த பெயர்களை(MAC address) மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளிட்டால், அவற்றைத் தவிர வேறு யாரும் உங்கள் வலையமைப்பில் நுழைய முடியாது. இந்த முறை பாதுகாப்புக்கானப் பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் கணினியின் MAC address தெரிந்து கொள்ள, start->cmd -> run என்ற இடத்திற்குச் சென்று ipconfig/all என்று உள்ளிட்டால், வரும் பல தகவல்களில் physical address என்ற ஒன்றும் இருக்கும். அதுவே உங்கள் கணினியின் MAC address.

இடத்தேர்வு:

உங்கள் வடமில்லா வலையமைப்பின் தொடர்புப் புள்ளியை, குஷ்டமாக இருந்தாலும் வீட்டின் நடுவே வைப்பது நல்லது. ஜன்னலரோமோ வாசல் பக்கமோ வைப்பது வில்லங்கத்தை விருந்துக்கழைப்பதற்கு ஒப்பானது. கட்டிடங்களுக்குள் வடமில்லா வலையமைப்பின் பயணிக்க முடிந்த தூரம் சுமார் 30 மீட்டர்கள் என்பதால், அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

பாதுகாப்பு வழிமுறைகள் கொஞ்சம் கிர்ர்ரடிக்க வைத்தாலும், வீடுகளில் இணைய இணைப்பினைப் பகிர்வதற்கு வடமில்லா வலையமைப்பு மிகவும் விரும்பப்படும் காரணம், அதன் வசதி மற்றும் வலையமைப்பினைச் செயல்படுத்துதலின் எளிமைத் தன்மை. மைக்கெல் மார்கஸ் பரிந்துரைத்த அலைக்கற்றை குறித்தான முடிவுகள், ஆரம்பத்தில் சோர்ந்து விடாமல் கூடி வாழ முற்பட்ட உபகரணத் தயாரிப்பாளர்கள், spread spectrum முறையை உலகுக்களித்தத் தானைத் தலைவி ஹெடி லமர் என எல்லாரும் சேர்ந்த அளித்த ஊட்டச்சத்தின் விளைவே இன்று வடமில்லா வலையமைப்பு பிரம்மாண்டமாய் பரவலாகியிருக்கிறது. சில நகரங்களே கூட ஒட்டுமொத்தமாக வடமில்லா வலையமைப்பின் கீழ் கொண்டு வந்து, நகராட்சியால் இணையச் சேவை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (WiFi City, Municipal WiFi). இந்தியாவில் புனே நகரத்தில் கூட நகரம் முழுமைக்குமான வடமில்லா வலையமைப்பு வழங்குவதற்கானத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. புனே வாசிகள் யாரேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.


30 முதல் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரை பயணிக்கும் வடமில்லா வலையமைப்பு 50 கிலோமீட்டர் பயணித்தால் எப்படி இருக்கும்? வேகத்தில் 54 Mbps இல் இருந்து 1024 Mbps ஆக அசுரவேகமெடுத்தால் எப்படி இருக்கும் போன்ற யோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து வடமில்லா வலையமைப்பினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வந்திருக்கும் தொழில்நுட்பங்கள் தான் WiMedia (802.15.3) மற்றும் WiMax (802.16). இன்னும் பரவலாகாத இத்தொழில்நுட்பங்கள் விரைவில் நம் வீதிகளில் வலம் வரும் நாள் தூரமில்லை. 


பி.கு: பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தான் செயல்விளக்கங்கள் ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்புக்கேற்ப மாறுபடும் என்பதால் பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. அவற்றைச் செயல்படுத்துவதில் சிரமங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் உபகரணத்தின் விவரங்களோடு தெரிவித்தால் உதவி செய்ய முயற்சிக்கச் சுடுதண்ணி என்ற வலைத்தளம்  தயாராக உள்ளது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
நன்றி : சுடுதண்ணி 

1 comment:

BoobalaArun said...

அருமையான கட்டுரை. நான்கு பாகமும் மிக நேர்த்தியா உள்ளது.

பதிவுக்கு நன்றிகள்...
http://breakthesillyrules.blogspot.com/

LinkWithin

Related Posts with Thumbnails

முந்தய பக்கங்கள்